புதன், டிசம்பர் 09, 2009

உடற்பயிற்சியும் எடை கூடலும்

உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், எடை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே உடற்பயிற்சி செய்பவர்களின் விருப்பமாக இருக்கும். ஆனா பாருங்க சில பேருக்கு உடல்பயிற்சி செய்தா உடல் எடை கூடும். ஏன்? இது எனக்கு நேர்ந்தது. அதனால கூகுள் தேடல் செய்தேன். அதில் கிடைத்த தகவல்களை இங்க சொல்றேன்.

இது பெரிய சிக்கல் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எடை கூட பல காரணங்கள் இருக்கலாம்.

1. நிறைய தின்பது. அதாவது உடற்பயிற்சியின் போது செலவாகும் ஆற்றலை (கலோரி) விட அதிக ஆற்றலை (கலோரி) உட்கொள்வது. உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் பசி அதிகம் எடுக்கும், உடற்பயிற்சிதான் செய்யறோமே என்ற நினைப்பில் கணக்கு வழக்கு இல்லாமல் தின்பது. இதுவே மிகப்பெரும்பாலோரின் தவறாக இருக்கும்.

2. சரியாக தின்னாமல் இருப்பது. உடற்பயிற்சி பலன் முழுமையாக கிடைக்க வேண்டி கம்மியாக தின்பார்கள். இதுவும் தவறு. இது எதிர்மறையான விளைவை உண்டாக்கிவிடும் .சரியான அளவு ஆற்றல் (கலோரி) உள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

3. உடற்பயிற்சி செய்வதின் பலன் முழுமையாக தெரிய சிறிது காலம் கொடுங்கள். சிலருக்கு சிறிது காலம் எடுக்கும். குறைந்தது சில வாரங்கள் ஆகும். 2~3 வாரம் கழிச்சு பாருங்க.

4. கொழுப்பு குறையும் வேகத்தை விட சதை (கூழச்சதை அல்ல, அது கொழுப்பு :-))) கூடும் வேகம் அதிகமிருக்கலாம். சதை எடை அதிகம் உள்ளது.

5. வெகுசிலருக்கு தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தால் எடை கூடலாம். இது மிகவும் அரிது. உடல்நலக் குறைபாடுகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் எடை குறைவதை தடுக்கலாம். என் நண்பன் ஒருவனுக்கு இந்த சிக்கல் உண்டு (அவனுக்கு தைராய்டு கிடையாது வேறு தொந்தரவு). மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தாதீர்கள். சத்துள்ள உணவு உட்கொள்ளுங்கள். முடிந்த அளவு காய்கறி, பழங்களை சேர்த்துக்குங்க. உடற்பயிற்சியின் போதோ அல்லது அப்புறமோ தண்ணீர் குடிங்க. பால் (சோயா பால் அல்ல) குடிச்சா கொழுப்பு கரைந்து தசை கூடுதுன்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. கும்முன்னு சதை புடைச்சிக்கிட்டு இருக்கனும் அப்படிங்கறவங்க பயிற்சிக்கு அப்புறம் பால் குடிங்க.

2 அல்லது 3 வாரம் தொடர்ச்சியா உடற்பயிற்சி செய்தா கண்டிப்பா எடை குறையத்துவங்கும். எப்போதும் திங்குறதுல கவனம் தேவை. அப்புறம் என்ன "ஊசி போல உடம்பிருந்தா தேவையில்லை பார்மஸி..."ன்னு பாட்டு பாட வேண்டியது தான்.

செவ்வாய், மே 19, 2009

மூச்சு விடும் முறை

அடுத்தவன பார்த்து பொறாமையில் பெருமூச்சு விடுவது பற்றி நான் இங்கு சொல்லவில்லை. இஃகி இஃகி...ஏக்கத்திலயும் பெருமூச்சு விடுவாங்க ஒத்துக்கிறேன். ஆனா நான் இங்க சொல்ல வரது இயல்பா நாம் விடும் மூச்சு பற்றி.

பெரும்பாலானோர் மூச்சு விடும் போது வயிற்றை வெளித்தள்ளுவதும், மூச்சை உள்வாங்கும் போது வயிற்றை உள்இழுப்பதும் என இருப்பர். இது தவறு. மூச்சு விடும் போது வயிற்றை உள்இழுக்க வேண்டும், மூச்சை உள்வாங்கும் போது வயிற்றை வெளித்தள்ள வேண்டும். இப்ப நீங்க மூச்சு விடும் போது எப்படி வயிற்றை இழுக்கறீங்க என்று கவனித்து பாருங்கள்.

மூச்சை வெளிவிடும் போது மெதுவாக வெளிவிட வேண்டும். அதாவது மூச்சை உள்வாங்க 16 வினாடிகள் எடுத்தால் வெளிவிட 16 வினாடிகள் அல்லது அதற்கு மேல் எடுக்க வேண்டும். 1:2 விகிதம் மிக நன்று. மெதுவாக மூச்சை வெளிவிடுவது முதலில் கடினமாக இருக்கும்.

முயன்று பாருங்க, சரியான முறையில் மூச்சு விடுங்க. (நான் மூச்சை விட்டுடுங்க என்று சொல்லவில்லை :-)) )

குறிப்பு: படபடப்பு வரும் சமயத்தில் 2 அல்லது 3 முறை நன்றாக மூச்சை இழுத்து விட்டால் படபடப்பு குறையும். இவ்வாறு செய்யும் போது படபடப்பு, அழுத்தம் நீங்கி உடல்\மனம் இயல்பு நிலைக்கு வரும்.

சனி, ஜனவரி 10, 2009

பல் மருத்துவரும் என் சொத்தை பல்லும்

சொத்தை பல்ல புடுங்க போனா சொத்தையே புடுங்கிட்டாருன்னு பல் மருத்துவர் நகைச்சுவைய \ நையாண்டியை கேட்டிருப்போம். ஆனா எனக்கு அது அனுபவம். :-((

பல் தேய்க்கும் போது ஈறுல இரத்தம் வருதுன்னு சொல்லி இந்தியரான ஒரு பல் மருத்துவரிடம் போனேன், இவர் ஈறு தொடர்பான நோய்களுக்காக சிறப்பாக படித்தவர். அவரும் 4 X-Ray எடுத்தார், பின்பு வாயில பல் இருக்குற 4 பாகத்தையும் (மேல 2, கீழ 2) சுத்தம் பண்ணுனா சரி ஆகிடும்ன்னு சொன்னார். மருத்துவ காப்பீடு போக நான் $500 கொடுத்தேன். கைக்காசு $500 குடுத்தும் புண்ணியம் இல்லை.

மறுபடியும் இரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. அலோபதி சரிவராது அப்படீன்னு 3 ஆண்டு எனக்கு தெரிஞ்ச மருத்துவம் பண்ணி பார்த்தேன்.. ம் கூம் .. சரி ஆகலை. நிலைமை மோசமானது தான் மிச்சம். வேற வழியில்லாம அலோபதி மருத்துவம் பார்க்க வேண்டியதா போச்சு.

இப்ப வேற மருத்துவர பார்த்தேன், இவங்க மத்திய கிழக்கை சேர்ந்தவங்க (ஈரான்னு நினைக்கிறேன்) . இவங்களும் ஈறு பற்றி படித்த நிபுணர். இவங்களும் 4 X-Ray எடுத்தாங்க. வாயில பல் இருக்குற 4 பாகத்தையும் (மேல 2, கீழ 2) சுத்தம் பண்ணுனா சரி ஆகிடும்ன்னு சொன்னாங்க. 4 பாகத்தையும் சுத்தம் பண்ணுனா இரத்தம் வரது நின்னுடுமான்னு கேட்டேன். அதெல்லாம் உறுதியா சொல்ல முடியாது நிக்கும் வரை தொடர் மருத்துவம் பார்க்கனும் அப்படின்னு சொன்னாங்க. :-( . ஒரு பக்கம் நிறைய வந்தது அதனால அந்த பாகத்தை மட்டும் சுத்தம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் அங்க போகல, யாரு போவா?... அப்பதான் கவனிச்சோம் ஒரு உடைந்த கடைவாய் பல்லுல சீழ் வரத.

சரி அந்த உடைந்த பல்லை மட்டும் பிடுங்குவோம் அப்படின்னு அவங்க கிட்ட போனேன், ஒரு காகிதத்தை கொடுத்து கையெழுத்து போட சொன்னாங்க, அதுல பெரிய பட்டியலே இருந்துச்சி. பல்லு புடுங்குன்னா இது இது மாதிரி ஆகிட்டா மருத்துவர் பொறுப்பில்லை அப்படின்னு எழுதிக்கொடுக்கும் தாள் அது. நான் பட்டியல பார்த்து பயந்து போயி பல்ல புடுங்காம வந்துட்டேன்.

ஆனா எனக்கு பல்லை புடுங்கனும், என்ன செய்வது? வேற வழியில்லாம அவங்ககிட்ட போனேன். பெரிய பட்டியல் காகிதத்தில் கையெழுத்து போட்டேன்னு சொல்ல தேவையில்லை :-(.

ரொம்ப சுலபமா பல்லை புடுங்கிட்டாங்க, அவங்க கூட ஆச்சரியப்பட்டாங்க... சின்ன வலி கூட இல்ல. பல்லை புடுங்கனுதும் ஈறுல இரத்தம் வறது நின்னு போச்சு. எவ்வளவு நாள் சீழ் வந்ததோ? பல் மருத்துவர் (நிபுணர்) இதை கூடவா சொல்ல\கண்டுபிடிக்க மாட்டார். ஒரு படத்துல விவேக் சொல்வாறே.. டாக்டர் நல்லா படிச்சிட்டு வாங்கன்னு... அது சரியாதான் இருக்கும் போல இருக்கு...