சனி, ஜனவரி 10, 2009

பல் மருத்துவரும் என் சொத்தை பல்லும்

சொத்தை பல்ல புடுங்க போனா சொத்தையே புடுங்கிட்டாருன்னு பல் மருத்துவர் நகைச்சுவைய \ நையாண்டியை கேட்டிருப்போம். ஆனா எனக்கு அது அனுபவம். :-((

பல் தேய்க்கும் போது ஈறுல இரத்தம் வருதுன்னு சொல்லி இந்தியரான ஒரு பல் மருத்துவரிடம் போனேன், இவர் ஈறு தொடர்பான நோய்களுக்காக சிறப்பாக படித்தவர். அவரும் 4 X-Ray எடுத்தார், பின்பு வாயில பல் இருக்குற 4 பாகத்தையும் (மேல 2, கீழ 2) சுத்தம் பண்ணுனா சரி ஆகிடும்ன்னு சொன்னார். மருத்துவ காப்பீடு போக நான் $500 கொடுத்தேன். கைக்காசு $500 குடுத்தும் புண்ணியம் இல்லை.

மறுபடியும் இரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. அலோபதி சரிவராது அப்படீன்னு 3 ஆண்டு எனக்கு தெரிஞ்ச மருத்துவம் பண்ணி பார்த்தேன்.. ம் கூம் .. சரி ஆகலை. நிலைமை மோசமானது தான் மிச்சம். வேற வழியில்லாம அலோபதி மருத்துவம் பார்க்க வேண்டியதா போச்சு.

இப்ப வேற மருத்துவர பார்த்தேன், இவங்க மத்திய கிழக்கை சேர்ந்தவங்க (ஈரான்னு நினைக்கிறேன்) . இவங்களும் ஈறு பற்றி படித்த நிபுணர். இவங்களும் 4 X-Ray எடுத்தாங்க. வாயில பல் இருக்குற 4 பாகத்தையும் (மேல 2, கீழ 2) சுத்தம் பண்ணுனா சரி ஆகிடும்ன்னு சொன்னாங்க. 4 பாகத்தையும் சுத்தம் பண்ணுனா இரத்தம் வரது நின்னுடுமான்னு கேட்டேன். அதெல்லாம் உறுதியா சொல்ல முடியாது நிக்கும் வரை தொடர் மருத்துவம் பார்க்கனும் அப்படின்னு சொன்னாங்க. :-( . ஒரு பக்கம் நிறைய வந்தது அதனால அந்த பாகத்தை மட்டும் சுத்தம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் அங்க போகல, யாரு போவா?... அப்பதான் கவனிச்சோம் ஒரு உடைந்த கடைவாய் பல்லுல சீழ் வரத.

சரி அந்த உடைந்த பல்லை மட்டும் பிடுங்குவோம் அப்படின்னு அவங்க கிட்ட போனேன், ஒரு காகிதத்தை கொடுத்து கையெழுத்து போட சொன்னாங்க, அதுல பெரிய பட்டியலே இருந்துச்சி. பல்லு புடுங்குன்னா இது இது மாதிரி ஆகிட்டா மருத்துவர் பொறுப்பில்லை அப்படின்னு எழுதிக்கொடுக்கும் தாள் அது. நான் பட்டியல பார்த்து பயந்து போயி பல்ல புடுங்காம வந்துட்டேன்.

ஆனா எனக்கு பல்லை புடுங்கனும், என்ன செய்வது? வேற வழியில்லாம அவங்ககிட்ட போனேன். பெரிய பட்டியல் காகிதத்தில் கையெழுத்து போட்டேன்னு சொல்ல தேவையில்லை :-(.

ரொம்ப சுலபமா பல்லை புடுங்கிட்டாங்க, அவங்க கூட ஆச்சரியப்பட்டாங்க... சின்ன வலி கூட இல்ல. பல்லை புடுங்கனுதும் ஈறுல இரத்தம் வறது நின்னு போச்சு. எவ்வளவு நாள் சீழ் வந்ததோ? பல் மருத்துவர் (நிபுணர்) இதை கூடவா சொல்ல\கண்டுபிடிக்க மாட்டார். ஒரு படத்துல விவேக் சொல்வாறே.. டாக்டர் நல்லா படிச்சிட்டு வாங்கன்னு... அது சரியாதான் இருக்கும் போல இருக்கு...