இது பெரிய சிக்கல் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எடை கூட பல காரணங்கள் இருக்கலாம்.
1. நிறைய தின்பது. அதாவது உடற்பயிற்சியின் போது செலவாகும் ஆற்றலை (கலோரி) விட அதிக ஆற்றலை (கலோரி) உட்கொள்வது. உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் பசி அதிகம் எடுக்கும், உடற்பயிற்சிதான் செய்யறோமே என்ற நினைப்பில் கணக்கு வழக்கு இல்லாமல் தின்பது. இதுவே மிகப்பெரும்பாலோரின் தவறாக இருக்கும்.
2. சரியாக தின்னாமல் இருப்பது. உடற்பயிற்சி பலன் முழுமையாக கிடைக்க வேண்டி கம்மியாக தின்பார்கள். இதுவும் தவறு. இது எதிர்மறையான விளைவை உண்டாக்கிவிடும் .சரியான அளவு ஆற்றல் (கலோரி) உள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.
3. உடற்பயிற்சி செய்வதின் பலன் முழுமையாக தெரிய சிறிது காலம் கொடுங்கள். சிலருக்கு சிறிது காலம் எடுக்கும். குறைந்தது சில வாரங்கள் ஆகும். 2~3 வாரம் கழிச்சு பாருங்க.
4. கொழுப்பு குறையும் வேகத்தை விட சதை (கூழச்சதை அல்ல, அது கொழுப்பு :-))) கூடும் வேகம் அதிகமிருக்கலாம். சதை எடை அதிகம் உள்ளது.
5. வெகுசிலருக்கு தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தால் எடை கூடலாம். இது மிகவும் அரிது. உடல்நலக் குறைபாடுகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் எடை குறைவதை தடுக்கலாம். என் நண்பன் ஒருவனுக்கு இந்த சிக்கல் உண்டு (அவனுக்கு தைராய்டு கிடையாது வேறு தொந்தரவு). மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.
எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தாதீர்கள். சத்துள்ள உணவு உட்கொள்ளுங்கள். முடிந்த அளவு காய்கறி, பழங்களை சேர்த்துக்குங்க. உடற்பயிற்சியின் போதோ அல்லது அப்புறமோ தண்ணீர் குடிங்க. பால் (சோயா பால் அல்ல) குடிச்சா கொழுப்பு கரைந்து தசை கூடுதுன்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. கும்முன்னு சதை புடைச்சிக்கிட்டு இருக்கனும் அப்படிங்கறவங்க பயிற்சிக்கு அப்புறம் பால் குடிங்க.
2 அல்லது 3 வாரம் தொடர்ச்சியா உடற்பயிற்சி செய்தா கண்டிப்பா எடை குறையத்துவங்கும். எப்போதும் திங்குறதுல கவனம் தேவை. அப்புறம் என்ன "ஊசி போல உடம்பிருந்தா தேவையில்லை பார்மஸி..."ன்னு பாட்டு பாட வேண்டியது தான்.