திங்கள், ஜூலை 17, 2006

சிகுன்குன்யா காய்ச்சல்- சில குறிப்புகள்

தற்போது சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்ட மக்கள் அரண்டு போய் இருப்பது "சிகுன்குன்யா" (Chikungunya) காய்ச்சலால். "சிகுன்குன்யா" டெங்கு போன்ற காய்ச்சல் நோய் வகையை சேர்ந்தது. இதற்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, இது ஒரு உயிர் கொல்லி நோய் இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. ஆனா இது உயிரை எடுக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை :-(. இந்நோய் தாக்கினால் ஒரு வாரம் கழித்து சரியாகிவிடும். ஆனால் அந்த ஒரு வாரம் வேதனையை அனுபவித்தே ஆகவேண்டும். இதற்கு மருந்து இல்லை என்பதால் மருத்துவரிடம் செல்லாமல் இருக்கக்கூடாது, மருத்துவரிடம் செல்லுங்கள் அவர் சில தேவையான சிகிச்சைகளை குடுத்து இந்நோயின் தீவிரம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்வார். இந்நோய் குணமாக நல்ல ஓய்வு தேவை அதனால் வேலைக்கு செல்வதை மறந்துவிடுங்கள். குணமான பின்பும் இதன் தாக்கம் வெகுநாட்களுக்கு இருக்கும் முக்கியமாக மூட்டு தொடர்பான தொந்தரவுகள்.

அறிகுறிகள்:

காய்ச்சல், தலைவலி, உடம்பில் (தோல்) தடிப்பு, மூட்டுகளில் வலி, வெளிச்சத்தை கண்டு வெறுப்பு, வாந்தி. குறிப்பாக காய்ச்சல், மூட்டு வலி அதிகம் இருக்கும். மூட்டு வலியால் சில மக்களால் நடக்கக்கூட முடியாது, காலின் எடை பல மடங்கு கூடியது போல் இருக்கும்.

இது ஒரு தொற்று நோயா?

பரவலாக ஒரு பகுதியில் உள்ள மக்களுக்கு இந்நோய் பரவுவதால் (கொள்ளை நோய் போல) இது தொற்று நோய் என்று நினைக்க தோன்றும் ஆனால் இது தொற்று நோய் அல்ல. மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவாது.

பின் எப்படி இது பரவுகிறது?

மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் நோய்களை கொடுக்கும் சாவா வரம் பெற்ற "கொசு"க்களின் மூலமே இந்நோய் பரவுகிறது. நோய் கண்ட மனிதரை கடித்த கொசு அடுத்த மனிதரை கடிக்கும் போது நோய் பரவுகிறது. சிகுன்குன்யா கிருமி தாங்கிய கொசு கடித்தால் நமக்கு நோயின் அறிகுறி தெரிய 1 - 12 நாட்கள் ஆகலாம்.

நோயை எப்படி கண்டு கொள்வது?

சிகுன்குன்யாவின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் அதனால் இரத்தப்பரிசோதனை மூலமே நோயால் தாக்கப்பட்டதை உறுதிபட அறிய முடியும். குறிப்பாக டெங்கு காய்ச்சல் உள்ள பகுதிகளில் இரத்தப்பரிசோதனை அவசியம்.

எப்படி இந்நோயை கட்டுபடுத்துவது?
 • கொசுவை துரத்திவிட்டால் இந்நோயை துரத்திவிடலாம்.
 • சுற்றுப்புறத்தை கொசுக்கள் இல்லாமல் வைத்துக்கொள்வது மிக மிக மிக முக்கியம். நகராட்சி, ஊராட்சி அமைப்புகளிடம் சொல்லி கொசு புகை அடிக்க சொல்லுங்க.
 • கொசு விரட்டியை பயன் படுத்தவும்.
 • முழு கால் சட்டை , முழு கை சட்டையை அணியவும் ( கொசு கடியில் இருந்து தப்பதான் ) இது குறைந்த அளவு பாதுகாப்பை அளிக்கும்.
 • வீடு மற்றும் தெருவில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். ( வீட்டை மற்றும் பார்த்துக்கொண்டால் போதாது)
 • வீட்டைச் சுற்றி செடிகள் இருந்தால் கொசுக்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசுகளில் இருந்து வரும் புகை கொசுக்களை தூர விரட்டிவிடும் என்பது நான் கண்டது.
 • சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள் அதற்கு வைட்டமின் சி உள்ள உணவுகளை ( நெல்லிக்காய், ஆரஞ்சு, மாம்பழம்)அதிகம் உட்கொள்ளுங்கள்.
 • கொசுக்கள் உள்ள பகுதிகளுக்கு செல்லாதீர்.
 • கொசுக்களை கவரும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.
 • இனிப்பு (சர்க்கரை) உணவுகள் கொசுவை கவர்பவை என்வே அவற்றை தவிர்க்கவும். இனிப்பு சாப்பிட்டவர்களை கொசு அதிகம் மொய்க்கும்.
 • வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். கொசுவுக்கு வாழைப்பழம் பிடித்த உணவு. வாழைப்பழ தோலில் கொசு மொய்ப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள், எங்கிருந்து தான் அத்தனை கொசுக்கள் வருமோ?
 • காலையில் ஒரு வைட்டமின் B 1 மாத்திரையை உட்கொள்ளுங்கள். அது நம் உடம்பில் இருந்து ஒரு வகையான வாசனையை வெளியேற்றும் அது கொசுக்களுக்கு பிடிக்காது அதனால் கொசு உங்களை கண்டால் 100 அடி தூர விலகி பறக்கும். :-) மனிதருக்கு அவ்வாசனை தெரியாது அதனால் கவலைப்படவேண்டாம் ;-)
 • சில இடத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாது என்ற சூழ்நிலை வந்தால் ( திறந்தவெளி தண்ணி தொட்டி) சில சொட்டு வேப்பெண்ணையை அத்தண்ணீரில் ஊற்றவும். இது கொசு முட்டைபொறிப்பதை தடுக்கும்.
 • கொசுவை விரட்ட என்னன்ன வழிகள் உள்ளனவோ அத்தனையையும் பயன்டுத்தி கொசுவை விரட்டி "சிகுன்குன்யா" வராமல் வாழுங்கள். இநத செய்தியை பக்கத்து வீட்டுக்காரரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் ( அங்க கொசு இருந்தாலும் நமக்கு பாதிப்பு வரும் )

10 கருத்துகள்:

- உடுக்கை முனியாண்டி சொன்னது…

நன்றிங்க.

இதைப் பத்தி எழுதணும்னு யோசிச்சிட்டே வந்தா தமிழ்மணத்தில உங்களோட பதிவு.

எல்லாரும் இதை மறந்து போன சமயத்துல பதிவு போட்டிருக்கீங்க. நல்லது.

இதுக்கான ஆதார சுட்டிகளையும் குடுத்துருக்கலாமே.

Suka சொன்னது…

நல்ல பதிவு... எங்கிருந்து பிடித்தீர்கள் ..இவ்வளவு தகவல்களை..

செய்தித்தாள் எதாவதில் வெளியிட்டால் மிக உபயோகமாயிருக்கும்.

வாழ்த்துக்கள்
சுகா

குறும்பன் சொன்னது…

நன்றி முனியாண்டி, நானும் பல நாளா யாராவது இதைப்பற்றி பதிவு போடுவாங்கன்னு பார்த்துக்கிட்டு இருந்துட்டு தான் சரி நாமே செய்யலாம் என்று எழுதினேன். நீங்க எழுதியிருந்தா நான் பின்னூட்டம் போட்டிறுப்பேன்.
நான் தகவல் சேகரித்தது "கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா" , யாகூ பதில்கள் , கொசு ஒழிப்பை பற்றி கூகுள்ளாண்டவரின் தேடல்களில் இருந்து.

குறும்பன் சொன்னது…

நன்றி சுகா. கண்டிப்பாக செய்திதாள்களில் இதைப்பற்றிய செய்தி வர வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இந்நோயை துரத்த முடியாது

நான் தகவல் சேகரித்தது "கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா" , யாகூ பதில்கள் , கொசு ஒழிப்பை பற்றி கூகுள்ளாண்டவரின் தேடல், மற்றும் நோயில் இருந்து மீண்டவர்களிடம் இருந்து.

பெயரில்லா சொன்னது…

தேவையான பதிவு.

பெயரில்லா சொன்னது…

தேவையான பதிவு

சந்தோஷ் aka Santhosh சொன்னது…

நல்ல தேவையான பதிவு குறும்பன்,
நீங்க தமிழ்மணத்தில் இல்லையா என்ன? பார்த்த ஞாபகம் இல்லை அது தான் :))

வைசா சொன்னது…

நல்ல தகவல்கள். எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விவரங்கள் அடங்கியிருக்கின்றன. நன்றி.

வைசா

குறும்பன் சொன்னது…

சந்தோஷ் , நான் தமிழ் மணத்தில் இருக்கிறேன் :-) ஆனால் இந்த "நலம் நாடுவோம்" பதிவு முன்பு தமிழ்மண திரட்டியில் திரட்டப்படாமல் இருந்தது.

குறும்பன் சொன்னது…

நன்றி வைசா.