வெள்ளி, ஏப்ரல் 05, 2013

பாட்டி மருத்துவம்



1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.

மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.

35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்


குறிப்பு:-
முகநூலில் வந்தது இங்கு. அதனால் எல்லா குறிப்புகளும் நம்பகத்தன்மை உடையவா என்று தெரியாது.









வியாழன், செப்டம்பர் 22, 2011

எண்ணெய் உள்இழுத்தல்

எண்ணெய் உள்இழுத்தல் (OIL PULLING) எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் புகழ்பெற்று வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து எண்ணெய் உள்இழுத்தலை எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இன்றைக்கு புகழ்பெற்று கொண்டு வரும் எண்ணெய் உள்இழுத்தலை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

எண்ணெய் உள்இழுத்தல் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று ஆண்டுகளாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது. தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக கருத்துகணிப்பில் தெரிவித்திருந்தனர்.

எண்ணெய் உள்இழுத்தலை எப்படி செய்வது?

காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது

உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

நிரூபிக்கப்பட்ட உண்மை

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல் &  நுரையீரல்நோய் , புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் நாளம் (பொதுவாக கால்களில் காணப்படும் கணுப்புடைப்பு நாளம் அல்லது விரிவடைந்த நாளம்), வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

வலி நிவாரணி

தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

நாளொன்றுக்கு மூன்று முறை

எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.

எண்ணெய் உள்இழுத்தலை  செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய மருத்துவ முறையை பின் பற்றுவதோடு சுத்தமான காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால் , நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.

மின்னஞ்சலில் வந்தது
கலைச்சொல்லுக்கு விக்சனரியை பார்க்கவும்.

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

சளி தொல்லையில் இருந்து விடுபட

சளி பிடிக்காத மனிதனே இல்லை. குறிப்பா பருவக்கால மாற்றங்களின் போது (அதாவது கோடை காலம் <-> குளிர் காலம் <-> மழைக்காலம்...) சளி வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எப்படி இதிலிருந்து தப்பிப்பது? பருவக்கால மாற்றங்களின் போது சுடு தண்ணி குடிங்க இதனால் சளி உங்களை பிடிப்பது தவிர்க்கப்படும். பெரும்பாலான நோய்கள் தண்ணீர் வழியாதான் பரவுது அதனால எப்பவும் சுடு தண்ணி குடிப்பது மிகவும் நல்லது. பிசுலரி தண்ணியை விட சுட வைத்த தண்ணியால் நோய்கள் வராது என உறுதியாக கூறலாம்.

சளி பிடிச்சிருச்சு மூக்குல இருந்து சளி தண்ணியா ஒழுகுது அதை நிறுத்த மருத்துவர் டானிக் கொடுத்திருப்பாரு. டானிக்க குடிச்சா நல்ல தூக்கம் வரும்  டானிக்க விடுங்க சளிக்குன்னு மாத்திரை தின்னாலும் நல்ல தூக்கம் வரும் ஏன்னு உங்களுக்கு தெரியுமா?

ஏன்னா அதில் சிறிதளவு சாராயம் கலந்திருக்கு. மாத்திரையில் எப்படி சாராயம் கலந்திருக்குமுன்னு கேட்டா அதில் ஆல்ககால் (alcohol) கலந்த  பொருட்கள் கலந்திருக்கும். அப்பொருட்களை வச்சி தான் மாத்திரையே தயாரிப்பாங்க. பெரும்பாலான மருந்துகளில் ஆல்ககால் (alcohol) கலந்திருக்கும். அளவு வேணா கூட குறைய இருக்கலாம்.

மருத்துவர பார்த்து மருந்து வாங்கி சளி போகறத விட குவாட்டர் நெப்போலியன் பிராந்தி வாங்கி குடிச்சா சளி உங்க பக்கமே வராது. (குழந்தைகளுக்கு இந்த மருந்து வேண்டாம்)

நெப்பொலியன் அல்லது VSOP அல்லது மானிட்டர் அல்லது உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு பிராந்தி வாங்கி குடிங்க சளி இல்லாம மகிழ்ச்சியா இருங்க.

ஒரு மூடி பிராந்திய உடல்நலிவுற்ற குழந்தைகளுக்கு சிலர்  ஊத்தி கொடுப்பாங்க (மருந்தாக) அப்படின்னு  நீங்க கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கறேன்.


குறிப்பு:- பிராந்திக்கு உள்ள மருத்துவ குணம் விசுக்கிக்கு கிடையாது. இரம்மு, ஜின்னு எப்படின்னு தெரியாது ஆனா பிராந்திய நம்பலாம். பீரு, வைனு குடிச்சா சளி அதிகமாயிடும்.

திங்கள், மார்ச் 28, 2011

தொந்தியை குறைக்க யோகா மற்றும் உடற்பயிற்சி - II

போன இடுகைல எந்த யோகாசனம் செஞ்சா தொந்தி குறையும் என்று சொன்னேன். இப்ப எந்த மாதிரியான உடற்பயிற்சி செய்தா குறையுமுன்னு பார்க்கலாம்.

சுலபமான வழி தான். தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்க காலை மேல தூக்குங்க. முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். நாம்மளால மடங்காம கால தூக்க முடியுமா? சரி சின்ன பயிற்சி செய்வோமே.

இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும் பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும் பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும், 5 முறை இவ்வாறு செய்யவும்.  (கீழ் இருக்கற படத்தை பாருங்க)

சரி கால் முட்டிய மடக்காம கால நேர முடியுது அடுத்து என்ன பண்றது? தரையில் படுங்க. பின் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்குங்க. (கீழ் இருக்கற படத்தை பாருங்க). எவ்வளவு உயரத்துக்கு? தரையில் கால் படாம இருக்கணும் அதான் அடிப்படை. 30 வினாடி அந்த நிலையிலேயே இருங்க.  நேரம் ஆக ஆக வயிறு இறுகும் உங்களால் காலை தூக்குனாப்பல வைச்சிருக்க முடியாது. 10, 15, ...., 60 வினாடின்னு நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 5 முறை இப்படி பண்ணுங்க. குட்டி ஒன்னு உடற்பயிற்சி செய்யவது மாதிரி படம் இருக்கு பாருங்க அதை முடிந்தவர்கள் முயற்சி செய்யலாம்.








கையை தூக்கலாமா? தூக்கலாம். கால முட்டி மடங்காம நேரா தூக்கனும் என்பது தான் அடிப்படை.  கையை கீழ் இருக்கும் படத்தின் படி தூக்கலாம் கையை மேல தூக்கும் போது தலை தூக்கியிருக்க வேண்டும். கை கால் தூக்கப்பட்ட நிலையில் 30 வினாடி இருங்கள். 10, 15, ...., 60 வினாடின்னு நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 5 முறை இப்படி பண்ணுங்க.


கையை அப்படியே வைச்சிருக்கறதா? அது ஒரு முறை மற்றொரு முறையில் கையை ஆட்டலாம். கீழ் இருக்கும் படத்தை பாருங்க. அது மாதிரியாட நிலையில் இருந்து கொண்டு கையை கீழையும் பின் சிறிது மேலையும் தூக்கவேண்டும். ஆனா கால்?? எந்த நிலைக்கு கை போனாலும் கால்நிலை மட்டும் மாற கூடாது.  முடியலையே அப்படிங்கீங்களா? உங்களுக்கு சலுகை உண்டு. தமிழ் நாட்டுல இருந்து கிட்டு இலவசம் சலுகை இல்லாமலா? இஃகி இஃகி. அதாவது அடிப்படை என்பது கால் முட்டி மடங்காம நேரா தூக்கனும் என்பது இல்லையா? கைய ஆட்டறது எல்லாம் கால் நேரா இருக்கறப்ப ஏதாவது பண்ணனுமேனு தான் இஃகி இஃகி.






இன்னொரு வழி இருக்கு ஆனா இது தொப்பையை குறைக்க மேலுள்ள வழியை போல் விரைவாக வேலை செய்யாது. ஆனா காவல் காரர் மாதிரியான கெட்டி தொப்பைகளுக்கு உரியவர்கள் இதை செய்யலாம் இஃகி. அதை அடுத்த இடுகையில் பார்க்கலாம்.

புதன், மார்ச் 23, 2011

தொந்தியை குறைக்க யோகா மற்றும் உடற்பயிற்சி - 1

நான் தொந்திய குறைச்சு அனுப இடுகை போடலாம்ன்னு இருந்தேன். என் தொந்தி குறையற வழியை காணாம். நேரப்பற்றாக்குறை இஃகி இஃகி. அதனால குறைக்கும் வழிமுறைகளை சொல்லறேன்.

முதல்ல யோகா.
பத்மாசனம் தெரியுமில்ல??  அது இப்படி தான் இருக்கும்.தியானம் பண்ணுபவர்கள் அமரக்கூடிய  ஆசனம்.






செய்யும் வழி முறை


முதல்ல வலது காலை தூக்கி இடது தொடையின் மீது போடனும் பின் இடது காலை தூக்கி வலது தொடையின் மீது போடனும்.

கடினமா இருக்கா. பத்மாசனத்துக்கு நம்மை பழக்கப்படுத்த  முதல்ல நாம ஆர்தரா பத்மாசனம் பண்ணுவோம்.


ஆர்தரா பத்மாசனம்

வலது காலை தூக்கி இடது தொடை மீது போடுவோம். இடது கால் அப்படியே இருக்கட்டும். 5 நிமிடம் இந்த நிலையிலேயே இருங்க. பின் இயல் நிலைக்கு வந்துவிட்டு இடது காலை தூக்கி வலது தொடை மீது போடுங்க. அந்த நிலையில் 5 நிமிடம் இருங்க. 5 நிமிடம் என்றது நமக்காக தான்.15 வினாடி, 30 வினாடி, 1 நிமிடம் என்று அதிகரித்து கொள்ளவும். சில நாட்கள் இந்த நிலைகளை முயன்று விட்டு பத்மாசனத்தை முயன்று பாருங்க. முடியலையா? ஆர்தரா ஆசனத்தை சில நாள் தொடருங்க பின் பத்மாசனத்தை முயன்று பாருங்க. முயற்சி செய்துக்கிட்டே இருந்தா பத்மாசனம் கைக்குள்ள (கால்குள்ள) வந்துரும்.

பத்மாசனம் 5 நிமிடம் செய்யும் திறன் வந்தவுடன் உத்திட பத்மாசனம் செய்யலாம்.  இது தான் தொந்திய குறைக்கும் ஆசனம்.

பத்மாசனம் போட்டு அமர்ந்த பிறகு கையை கீழ் ஊன்றி மேல் எழ வேண்டும். அது தான் உத்திட பத்மாசனம். கை மட்டும் தான் நிலத்தை தொட்டுக்கிட்டு இருக்கவேண்டும். இந்த நிலையில் 1 நிமிடம் இருக்கவும். 2, 5, 10, 15, ...வினாடிகள்ன்னு அதிகரிச்சுக்கலாம்.

இந்த ஆசனம் செய்து பாருங்க, உங்க வயிறு தானா உள்ள போகும். ஆசனம் பண்ணும் போதே வயிறு உள்வாங்கும். மூச்ச தம் கட்டி தான் இந்த ஆசனம் பண்ணமுடியும்.

குறிப்பு - சம்மனம் போட்டு உட்காரமுடியாதவர்கள் முதலில் சம்மனம் போட்டு உட்கார பழகவும். பின் மற்ற யோகாசனங்களை முயற்சிக்கலாம்.



புதன், டிசம்பர் 09, 2009

உடற்பயிற்சியும் எடை கூடலும்

உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், எடை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே உடற்பயிற்சி செய்பவர்களின் விருப்பமாக இருக்கும். ஆனா பாருங்க சில பேருக்கு உடல்பயிற்சி செய்தா உடல் எடை கூடும். ஏன்? இது எனக்கு நேர்ந்தது. அதனால கூகுள் தேடல் செய்தேன். அதில் கிடைத்த தகவல்களை இங்க சொல்றேன்.

இது பெரிய சிக்கல் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எடை கூட பல காரணங்கள் இருக்கலாம்.

1. நிறைய தின்பது. அதாவது உடற்பயிற்சியின் போது செலவாகும் ஆற்றலை (கலோரி) விட அதிக ஆற்றலை (கலோரி) உட்கொள்வது. உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் பசி அதிகம் எடுக்கும், உடற்பயிற்சிதான் செய்யறோமே என்ற நினைப்பில் கணக்கு வழக்கு இல்லாமல் தின்பது. இதுவே மிகப்பெரும்பாலோரின் தவறாக இருக்கும்.

2. சரியாக தின்னாமல் இருப்பது. உடற்பயிற்சி பலன் முழுமையாக கிடைக்க வேண்டி கம்மியாக தின்பார்கள். இதுவும் தவறு. இது எதிர்மறையான விளைவை உண்டாக்கிவிடும் .சரியான அளவு ஆற்றல் (கலோரி) உள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

3. உடற்பயிற்சி செய்வதின் பலன் முழுமையாக தெரிய சிறிது காலம் கொடுங்கள். சிலருக்கு சிறிது காலம் எடுக்கும். குறைந்தது சில வாரங்கள் ஆகும். 2~3 வாரம் கழிச்சு பாருங்க.

4. கொழுப்பு குறையும் வேகத்தை விட சதை (கூழச்சதை அல்ல, அது கொழுப்பு :-))) கூடும் வேகம் அதிகமிருக்கலாம். சதை எடை அதிகம் உள்ளது.

5. வெகுசிலருக்கு தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தால் எடை கூடலாம். இது மிகவும் அரிது. உடல்நலக் குறைபாடுகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் எடை குறைவதை தடுக்கலாம். என் நண்பன் ஒருவனுக்கு இந்த சிக்கல் உண்டு (அவனுக்கு தைராய்டு கிடையாது வேறு தொந்தரவு). மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தாதீர்கள். சத்துள்ள உணவு உட்கொள்ளுங்கள். முடிந்த அளவு காய்கறி, பழங்களை சேர்த்துக்குங்க. உடற்பயிற்சியின் போதோ அல்லது அப்புறமோ தண்ணீர் குடிங்க. பால் (சோயா பால் அல்ல) குடிச்சா கொழுப்பு கரைந்து தசை கூடுதுன்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. கும்முன்னு சதை புடைச்சிக்கிட்டு இருக்கனும் அப்படிங்கறவங்க பயிற்சிக்கு அப்புறம் பால் குடிங்க.

2 அல்லது 3 வாரம் தொடர்ச்சியா உடற்பயிற்சி செய்தா கண்டிப்பா எடை குறையத்துவங்கும். எப்போதும் திங்குறதுல கவனம் தேவை. அப்புறம் என்ன "ஊசி போல உடம்பிருந்தா தேவையில்லை பார்மஸி..."ன்னு பாட்டு பாட வேண்டியது தான்.

செவ்வாய், மே 19, 2009

மூச்சு விடும் முறை

அடுத்தவன பார்த்து பொறாமையில் பெருமூச்சு விடுவது பற்றி நான் இங்கு சொல்லவில்லை. இஃகி இஃகி...ஏக்கத்திலயும் பெருமூச்சு விடுவாங்க ஒத்துக்கிறேன். ஆனா நான் இங்க சொல்ல வரது இயல்பா நாம் விடும் மூச்சு பற்றி.

பெரும்பாலானோர் மூச்சு விடும் போது வயிற்றை வெளித்தள்ளுவதும், மூச்சை உள்வாங்கும் போது வயிற்றை உள்இழுப்பதும் என இருப்பர். இது தவறு. மூச்சு விடும் போது வயிற்றை உள்இழுக்க வேண்டும், மூச்சை உள்வாங்கும் போது வயிற்றை வெளித்தள்ள வேண்டும். இப்ப நீங்க மூச்சு விடும் போது எப்படி வயிற்றை இழுக்கறீங்க என்று கவனித்து பாருங்கள்.

மூச்சை வெளிவிடும் போது மெதுவாக வெளிவிட வேண்டும். அதாவது மூச்சை உள்வாங்க 16 வினாடிகள் எடுத்தால் வெளிவிட 16 வினாடிகள் அல்லது அதற்கு மேல் எடுக்க வேண்டும். 1:2 விகிதம் மிக நன்று. மெதுவாக மூச்சை வெளிவிடுவது முதலில் கடினமாக இருக்கும்.

முயன்று பாருங்க, சரியான முறையில் மூச்சு விடுங்க. (நான் மூச்சை விட்டுடுங்க என்று சொல்லவில்லை :-)) )

குறிப்பு: படபடப்பு வரும் சமயத்தில் 2 அல்லது 3 முறை நன்றாக மூச்சை இழுத்து விட்டால் படபடப்பு குறையும். இவ்வாறு செய்யும் போது படபடப்பு, அழுத்தம் நீங்கி உடல்\மனம் இயல்பு நிலைக்கு வரும்.

சனி, ஜனவரி 10, 2009

பல் மருத்துவரும் என் சொத்தை பல்லும்

சொத்தை பல்ல புடுங்க போனா சொத்தையே புடுங்கிட்டாருன்னு பல் மருத்துவர் நகைச்சுவைய \ நையாண்டியை கேட்டிருப்போம். ஆனா எனக்கு அது அனுபவம். :-((

பல் தேய்க்கும் போது ஈறுல இரத்தம் வருதுன்னு சொல்லி இந்தியரான ஒரு பல் மருத்துவரிடம் போனேன், இவர் ஈறு தொடர்பான நோய்களுக்காக சிறப்பாக படித்தவர். அவரும் 4 X-Ray எடுத்தார், பின்பு வாயில பல் இருக்குற 4 பாகத்தையும் (மேல 2, கீழ 2) சுத்தம் பண்ணுனா சரி ஆகிடும்ன்னு சொன்னார். மருத்துவ காப்பீடு போக நான் $500 கொடுத்தேன். கைக்காசு $500 குடுத்தும் புண்ணியம் இல்லை.

மறுபடியும் இரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. அலோபதி சரிவராது அப்படீன்னு 3 ஆண்டு எனக்கு தெரிஞ்ச மருத்துவம் பண்ணி பார்த்தேன்.. ம் கூம் .. சரி ஆகலை. நிலைமை மோசமானது தான் மிச்சம். வேற வழியில்லாம அலோபதி மருத்துவம் பார்க்க வேண்டியதா போச்சு.

இப்ப வேற மருத்துவர பார்த்தேன், இவங்க மத்திய கிழக்கை சேர்ந்தவங்க (ஈரான்னு நினைக்கிறேன்) . இவங்களும் ஈறு பற்றி படித்த நிபுணர். இவங்களும் 4 X-Ray எடுத்தாங்க. வாயில பல் இருக்குற 4 பாகத்தையும் (மேல 2, கீழ 2) சுத்தம் பண்ணுனா சரி ஆகிடும்ன்னு சொன்னாங்க. 4 பாகத்தையும் சுத்தம் பண்ணுனா இரத்தம் வரது நின்னுடுமான்னு கேட்டேன். அதெல்லாம் உறுதியா சொல்ல முடியாது நிக்கும் வரை தொடர் மருத்துவம் பார்க்கனும் அப்படின்னு சொன்னாங்க. :-( . ஒரு பக்கம் நிறைய வந்தது அதனால அந்த பாகத்தை மட்டும் சுத்தம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் அங்க போகல, யாரு போவா?... அப்பதான் கவனிச்சோம் ஒரு உடைந்த கடைவாய் பல்லுல சீழ் வரத.

சரி அந்த உடைந்த பல்லை மட்டும் பிடுங்குவோம் அப்படின்னு அவங்க கிட்ட போனேன், ஒரு காகிதத்தை கொடுத்து கையெழுத்து போட சொன்னாங்க, அதுல பெரிய பட்டியலே இருந்துச்சி. பல்லு புடுங்குன்னா இது இது மாதிரி ஆகிட்டா மருத்துவர் பொறுப்பில்லை அப்படின்னு எழுதிக்கொடுக்கும் தாள் அது. நான் பட்டியல பார்த்து பயந்து போயி பல்ல புடுங்காம வந்துட்டேன்.

ஆனா எனக்கு பல்லை புடுங்கனும், என்ன செய்வது? வேற வழியில்லாம அவங்ககிட்ட போனேன். பெரிய பட்டியல் காகிதத்தில் கையெழுத்து போட்டேன்னு சொல்ல தேவையில்லை :-(.

ரொம்ப சுலபமா பல்லை புடுங்கிட்டாங்க, அவங்க கூட ஆச்சரியப்பட்டாங்க... சின்ன வலி கூட இல்ல. பல்லை புடுங்கனுதும் ஈறுல இரத்தம் வறது நின்னு போச்சு. எவ்வளவு நாள் சீழ் வந்ததோ? பல் மருத்துவர் (நிபுணர்) இதை கூடவா சொல்ல\கண்டுபிடிக்க மாட்டார். ஒரு படத்துல விவேக் சொல்வாறே.. டாக்டர் நல்லா படிச்சிட்டு வாங்கன்னு... அது சரியாதான் இருக்கும் போல இருக்கு...

செவ்வாய், டிசம்பர் 26, 2006

BMI தவறான முறை

உடல் பருத்து விட்டதாவென்று அறிய "Body Mass Index - BMI" என்ற அளவுகோலை பயன் படுத்துகின்றனர். இது சரியான முறையா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஏன்? உயரத்தையும் எடையையும் வைத்துதான் BMI அளவை கணக்கிடுகிறார்கள். முக்கியமாக இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறியது பால் & வயது. இதன் காரணமாகவே BMI ஐ கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. ஆனால் உடல் ஊதி போய்விட்டதா என்பதை கண்டறிய BMI நாடும், நாடச்சொல்லும் மருத்துவர்களும் உடற்கூறு வல்லுனர்களுமே அதிகம்.

இந்த முறையை தவறென்று நான் கூறுவதற்கு காரணம்??

உயரம் 165 செ.மீ & எடை 65 கி.கி இதற்கான BMI 23.9

இது 22 வயது வாலிபன் & 40 வயது பெண், 70 வயது ஆண், 80 வயது பெண், 20 வயது இளைஞி எல்லோருக்கும் 23.9 என்ற அளவு பொதுவானது. இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

ஒருவர் உடற்பயிற்சி செய்யாதவர் மற்றொருவர் கடினமாக உடற்பயிற்சி செய்பவர் இருவரின் உடல் அளவும் ஒன்று ( இடுப்பு, மார்பு ) ஆனால் உடற்பயிற்சி செய்பவரின் எடை உடற்பயிற்சி செய்யாதவரின் எடையை விட அதிகம். நல்ல உருண்டு திரண்ட சதையின் காரணமாக எடை கூடுதலாக இருக்கும் அதற்காக அவரை எடை அதிகமானவர் என்று கூறலாமா? இது போன்ற பல அடிப்படை தவறுகள் உள்ள முறையை எவ்வாறு எல்லோரும் அறிவியல் பூர்வமானது என்று பரிந்துரைக்கின்றனர் என்று எனக்கு விளங்கவில்லை.

இது நான் தமிழ்நெட் 99 விசை பலகையை பயன் படுத்தி எழுதும் பதிவு.

ஞாயிறு, நவம்பர் 12, 2006

புகை பழக்கத்தை விட ஒரு எளிய வழி

புகை பழக்கம் மோசமான பழக்கம் ஆனால் முயன்றால் அதிலிருந்து யாராலும் விடுபட முடியும். புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு எளிய வழி உள்ளது. அதன் படி நடந்தால் புகை பழக்கத்துக்கு ஒரு பெரிய விடை கொடுக்கலாம். அப்படி என்ன வழி இருக்கு என்று கேட்கிறீர்களா? இதோ ...

1. இந்த பழக்கத்தை நிரந்தரமாக விட்டு விட வேண்டும் என்று எண்ணம் வேண்டும். இது தான் முதன்மையானது இது இல்லைன்னா புகை பிடிக்கும் பழக்கத்தை விடவே முடியாது.

2. புகை பிடிக்கும் போது ஒரு பெரிய மெதப்பு தோணும் அது பொய்யின்னு (மாயை) தெரிஞ்சுக்குங்க. ஆனா புற்று நோய் வர வாய்ப்பிருக்கு, இதை மனசுல போட்டுக்குங்க.

3. இனிமே புகை பிடிக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணியதும் இருக்கிற எல்லா சிகரெட்டையும் தூக்கி வீசிடனும். ஒன்னும் உங்கக்கிட்ட இருக்கக்கூடாது. தூக்கிப்போடறப்ப மனசுக்கு ரொம்ப வேதனையாதான் இருக்கும் :-( என்ன பண்றது பழக்கத்தை விடணுமே. சிகரெட்டின் பெருமை உணர்ந்து வாய சுடுற வரைக்கும் சிகரெட்டை இழுத்தத இங்கு நினைத்து கதறக்கூடாது. நாளையில் இருந்து பிடிக்கமாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு இன்னைக்கே இருக்கிற எல்லா சிகரெட்டையும் புகைக்காதிங்க. நிறைய பேர் அப்படி தான் செய்வாங்க , நாளைக்கு நாளைக்குன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க சிகரெட் புடிக்கிறத விட மாட்டாங்க, அவங்களுக்கு நாளைக்கு வரவே வராது.

4. புகைப்பதை நிறுத்தியாச்சுன்னு உங்க நண்பர்கள்கிட்ட சொல்லுங்க, உடனே சில நலம் விரும்பிகள் 555 வாங்கி பத்து மச்சின்னு சொல்லுவாங்க, சில பேர் பத்த வைத்தே கொடுப்பாங்க, அந்த சதியில் விழுந்துடாதிங்க. நினைச்சிப்பாருங்க வெறும் கோல்ட் பிளேக்/சிசர்/பீடி ஒன்னு குடுன்னு கேட்டப்போ குடுத்தாங்களா? இல்லையே! இப்ப என்ன கரிசனம்??? ( கொடுத்தாலும் அடுத்த நாளே கடன் காரன் மாதிரி உங்களை வாங்கி தர சொல்லிடுவாங்கல்ல)

5. நண்பர்கள் கூட போகும் போது அவர்கள் 1 பாக்கட் வாங்கி உங்கக்கிட்ட 1 சிகரெட் எடுத்துக்க சொல்லி நீட்டுவாங்க , பழக்கத்தில் எடுத்து பத்த வச்சிறாதீங்க. வேண்டாம்! சிகரெட்டை விட்டாச்சுன்னு சொல்லிடுங்க.

6. இப்படி பல பல தடைகளையும் மீறி வெற்றிகரமா ஒரு வாரம் சிகரெட் புகைக்காம இருந்திங்கன்னா உங்களை பாராட்டி ஒரு டம்ளர் பழரசம் அருந்துங்க, முடிந்தா உங்கள் நண்பர்களுக்கும் வாங்கி கொடுங்க.

7. ஒரு வாரம் கழித்து சிகரெட் பத்த வைக்க ஆசை வரும். ஒன்னு மட்டும் யாருக்கும் தெரியாம அப்படின்னு சொல்லிட்டு சிகெரெட்டை கையில் எடுக்காதிங்க. அப்புறம் விட முடியாது.

8. சில சமயம் அடுத்தவர்கள் சிகரெட் புகைப்பதை பார்த்தா ரெண்டு இழுப்பு இழுக்க தோனும் இந்த மாதிரியான நேரங்கள் தான் மிக முக்கியமானது. இது ஒரு 4 அல்லது 5 நிமிடங்களுக்கு இருக்கும், இந்த நேரத்தில் மனதை வேறு திசையில் செலுத்தி புகைக்கும் எண்ணம் தோன்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். டீ, காபி, பழரசம் குடிங்கள் அல்லது புகைக்கிற ஆளை திட்டுங்கள் ( மனசுக்குள் தான் ) அந்த 5 நிமிடம் போய் விட்டால் புகைக்கும் எண்ணமும் போய் விடும்.

9. புகை பிடிக்காம 1 மாசம் ஓட்டிட்டீங்கன்னு வைங்க உங்களை நீங்களே பாராட்டி 1 பழரசம் குடிங்க, முடிந்தா உங்கள் நண்பர்களுக்கும் வாங்கி கொடுங்க.

10. இதே மாதிரி ஒரு 3 மாசம் ஓட்டுங்க., உங்களை பாராட்டி 1 பழரசம் குடிங்க. காசு இருந்தா நண்பர்களுக்கு வாங்கி கொடுங்க. ஆனா பழரசம் குடிக்கற பழக்கத்தை விடாம தொடருங்க.

11. உங்களால புகைக்காம இருக்க முடியும்ன்னு தெரிஞ்சி போச்சு, அப்புறம் என்ன புகை பழக்கத்துக்கு பெரிய கும்பிடு தான். உங்களுக்கு வாழ்த்துக்கள்.

12. அப்புறம் மறக்காம புகை பிடிக்கும் உங்க நண்பர்களை திருந்த சொல்லுங்க.