திங்கள், ஜூலை 17, 2006

சிகுன்குன்யா காய்ச்சல்- சில குறிப்புகள்

தற்போது சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்ட மக்கள் அரண்டு போய் இருப்பது "சிகுன்குன்யா" (Chikungunya) காய்ச்சலால். "சிகுன்குன்யா" டெங்கு போன்ற காய்ச்சல் நோய் வகையை சேர்ந்தது. இதற்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, இது ஒரு உயிர் கொல்லி நோய் இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. ஆனா இது உயிரை எடுக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை :-(. இந்நோய் தாக்கினால் ஒரு வாரம் கழித்து சரியாகிவிடும். ஆனால் அந்த ஒரு வாரம் வேதனையை அனுபவித்தே ஆகவேண்டும். இதற்கு மருந்து இல்லை என்பதால் மருத்துவரிடம் செல்லாமல் இருக்கக்கூடாது, மருத்துவரிடம் செல்லுங்கள் அவர் சில தேவையான சிகிச்சைகளை குடுத்து இந்நோயின் தீவிரம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்வார். இந்நோய் குணமாக நல்ல ஓய்வு தேவை அதனால் வேலைக்கு செல்வதை மறந்துவிடுங்கள். குணமான பின்பும் இதன் தாக்கம் வெகுநாட்களுக்கு இருக்கும் முக்கியமாக மூட்டு தொடர்பான தொந்தரவுகள்.

அறிகுறிகள்:

காய்ச்சல், தலைவலி, உடம்பில் (தோல்) தடிப்பு, மூட்டுகளில் வலி, வெளிச்சத்தை கண்டு வெறுப்பு, வாந்தி. குறிப்பாக காய்ச்சல், மூட்டு வலி அதிகம் இருக்கும். மூட்டு வலியால் சில மக்களால் நடக்கக்கூட முடியாது, காலின் எடை பல மடங்கு கூடியது போல் இருக்கும்.

இது ஒரு தொற்று நோயா?

பரவலாக ஒரு பகுதியில் உள்ள மக்களுக்கு இந்நோய் பரவுவதால் (கொள்ளை நோய் போல) இது தொற்று நோய் என்று நினைக்க தோன்றும் ஆனால் இது தொற்று நோய் அல்ல. மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவாது.

பின் எப்படி இது பரவுகிறது?

மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் நோய்களை கொடுக்கும் சாவா வரம் பெற்ற "கொசு"க்களின் மூலமே இந்நோய் பரவுகிறது. நோய் கண்ட மனிதரை கடித்த கொசு அடுத்த மனிதரை கடிக்கும் போது நோய் பரவுகிறது. சிகுன்குன்யா கிருமி தாங்கிய கொசு கடித்தால் நமக்கு நோயின் அறிகுறி தெரிய 1 - 12 நாட்கள் ஆகலாம்.

நோயை எப்படி கண்டு கொள்வது?

சிகுன்குன்யாவின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் அதனால் இரத்தப்பரிசோதனை மூலமே நோயால் தாக்கப்பட்டதை உறுதிபட அறிய முடியும். குறிப்பாக டெங்கு காய்ச்சல் உள்ள பகுதிகளில் இரத்தப்பரிசோதனை அவசியம்.

எப்படி இந்நோயை கட்டுபடுத்துவது?
  • கொசுவை துரத்திவிட்டால் இந்நோயை துரத்திவிடலாம்.
  • சுற்றுப்புறத்தை கொசுக்கள் இல்லாமல் வைத்துக்கொள்வது மிக மிக மிக முக்கியம். நகராட்சி, ஊராட்சி அமைப்புகளிடம் சொல்லி கொசு புகை அடிக்க சொல்லுங்க.
  • கொசு விரட்டியை பயன் படுத்தவும்.
  • முழு கால் சட்டை , முழு கை சட்டையை அணியவும் ( கொசு கடியில் இருந்து தப்பதான் ) இது குறைந்த அளவு பாதுகாப்பை அளிக்கும்.
  • வீடு மற்றும் தெருவில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். ( வீட்டை மற்றும் பார்த்துக்கொண்டால் போதாது)
  • வீட்டைச் சுற்றி செடிகள் இருந்தால் கொசுக்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசுகளில் இருந்து வரும் புகை கொசுக்களை தூர விரட்டிவிடும் என்பது நான் கண்டது.
  • சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள் அதற்கு வைட்டமின் சி உள்ள உணவுகளை ( நெல்லிக்காய், ஆரஞ்சு, மாம்பழம்)அதிகம் உட்கொள்ளுங்கள்.
  • கொசுக்கள் உள்ள பகுதிகளுக்கு செல்லாதீர்.
  • கொசுக்களை கவரும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.
  • இனிப்பு (சர்க்கரை) உணவுகள் கொசுவை கவர்பவை என்வே அவற்றை தவிர்க்கவும். இனிப்பு சாப்பிட்டவர்களை கொசு அதிகம் மொய்க்கும்.
  • வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். கொசுவுக்கு வாழைப்பழம் பிடித்த உணவு. வாழைப்பழ தோலில் கொசு மொய்ப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள், எங்கிருந்து தான் அத்தனை கொசுக்கள் வருமோ?
  • காலையில் ஒரு வைட்டமின் B 1 மாத்திரையை உட்கொள்ளுங்கள். அது நம் உடம்பில் இருந்து ஒரு வகையான வாசனையை வெளியேற்றும் அது கொசுக்களுக்கு பிடிக்காது அதனால் கொசு உங்களை கண்டால் 100 அடி தூர விலகி பறக்கும். :-) மனிதருக்கு அவ்வாசனை தெரியாது அதனால் கவலைப்படவேண்டாம் ;-)
  • சில இடத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாது என்ற சூழ்நிலை வந்தால் ( திறந்தவெளி தண்ணி தொட்டி) சில சொட்டு வேப்பெண்ணையை அத்தண்ணீரில் ஊற்றவும். இது கொசு முட்டைபொறிப்பதை தடுக்கும்.
  • கொசுவை விரட்ட என்னன்ன வழிகள் உள்ளனவோ அத்தனையையும் பயன்டுத்தி கொசுவை விரட்டி "சிகுன்குன்யா" வராமல் வாழுங்கள். இநத செய்தியை பக்கத்து வீட்டுக்காரரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் ( அங்க கொசு இருந்தாலும் நமக்கு பாதிப்பு வரும் )

ஞாயிறு, ஜூன் 11, 2006

உங்களுக்கு கொழுப்பு அதிகமா?

குறும்பு பண்றவங்கள , தெனாவட்டா திரியரவங்கள பார்த்து உனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு என்று சொல்வது உண்டு. ரொம்ப குறும்பு பண்ணுனா ( ரொம்ப கொழுப்பு) குறும்பு பண்ற ஆளுக்கு நல்லதில்லை. அது போலவே ரொம்ப கொழுப்பு இருந்ததென்றால் உடம்புக்கு நல்லதில்லை.

கொழுப்பில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று 2 வகை உண்டு. நல்ல கொழுப்பு அதிகமாகவும் கெட்ட கொழுப்பு குறைவாகவும் இருந்தா தான் உடலுக்கு நல்லது.

நல்ல கொழுப்பை HDL என்றும் கெட்ட கொழுப்பை LDL என்றும் சொல்வார்கள்.

ஏன் LDL ஐ கெட்டதுன்னு சொல்றாங்க?

நிறைய LDL கொழுப்பு இரத்தத்தில் கலந்து இருந்தா அது இரத்தக் குழாய்களின் உள் சுவரில் படிந்து இரத்ததின் போக்கை தடை செய்யும். இந்த படிமனானது எளிதில் கரையாதது. இது குறுகிய இரத்தக்குழாயில் உருவானால் ஆபத்து அதிகம். மாரடைப்பு, பக்க வாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதயத்துக்கும் செல்லும் இரத்தம் தடைபட்டா மாரடைப்பு, மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபட்டா பக்க வாதம். LDL அதிகமா இருந்தா ஆபத்து.

உப்பு தண்ணி குழாயில் எப்படி உப்பானது கத்தியால வெட்டகூட முடியாத அளவுக்கு படியுதோ அது மாதிரி கெட்ட கொழுப்பு இரத்தக்குழாயில் படியும்.

HDL ஐ ஏன் நல்ல கொழுப்புன்னு சொல்றாங்க?

இது இரத்தக்குழாயில் படியும் கொழுப்பு படிமனை நீக்குகிறது/கரைகிறது, அவ்வாறு கரைத்த கொழுப்பை ஈரலுக்கு கொண்டு சென்று சுத்திகரிக்கிறது. அதனால் இரத்தக்குழாயில் கொழுப்பு படிமம் உருவாவது மட்டுபடுத்தப்படுகிறது. அதனால் இதயத்திலிருந்து வெளி செல்லும் இரத்தம் தடைபடாமல் செல்ல வழி செய்து மாரடைப்பு வராமல் நம்மை பாதுகாக்கிறது. HDL குறைவா இருந்தா ஆபத்து.

Triglycerides - ட்ரைகிளிசரைட்

இது இன்னொருவகையான கொழுப்பு. இது அதிகமானால் நல்ல கொழுப்பின் அளவு குறைந்துவிடும். இந்த வகையில் இது நமக்கு கெடுதல் செய்கிறது. இந்த வகை கொழுப்பை நாம் உணவு மூலமாகவும் பெறுகிறோம் நம் உடலும் உற்பத்தி செய்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இது அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

நம் உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகரிக்க என்ன காரணம்?

1. கொழுப்பெடுத்த குடும்பத்தில் பிறந்தால் கொழுப்பு இல்லாம என்ன செய்யும்? ( சும்மா கிண்டலு ). அதாவது மரபு வழி காரணமாக சிலருக்கு அதிக கொழுப்பு இருக்கும்.
2. குண்டாக இருப்பது நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
3. சோம்பேறியாக இருப்பது நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்
4. வயது ஆக ஆக கொழுப்பு அதிகரிக்கும். (20 வயதிலிருந்து -- கல்லை தின்னாலும் செறிக்கிற வயசு முடிஞ்சிபோச் :-( )
5. உணவு பழக்கங்கள் - கொழுப்பு அதிகமாக உள்ள உணவை உட்கொள்வதினால் கொழுப்பு அதிகரிக்கும். (சுவையா இருக்கேன்னு பஜ்ஜி, வடை, பூரி போன்ற எண்ணெய் பலகாராங்களை உட்கொள்ளாதீர்கள்)
6. பால் - மாதவிலக்கு சுழற்சி முடிந்த பெண்களுக்கு அவர்கள் வயதையொத்த ஆண்களை விட கொழுப்பு அதிகமாகவும், மாதவிலக்கு சுழற்சி முடியாவிட்டால் அவர்கள் வயதையொத்த ஆண்களை விட கொழுப்பு குறைவாகவும் இருக்கும். அதாவது வயதான பெண்கள் & எல்லா ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
7. Type 2 சர்க்கரை நோய் (diabetes) HDL அளவை குறைக்கும்.

கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க சில வழிகள்.

1. சரியான உணவு பழக்கங்கள்.
2. உடற்பயிற்சி.
3. மது, புகை பழக்கத்தை தவிர்த்தல்.

எந்தவகையான உணவு நல்லது?

1. சோயாவை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
2. முட்டையின் கருவை முற்றாக தவிர்த்துவிடுங்கள்.
3. மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். கர்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் மீனை தவிர்க்கவும்.
4. சர்க்கரையை சேர்த்துக்கொள்வதை குறைத்துக் கொள்ளவும். இது ட்ரைகிளிசரைடை (Triglycerides) குறைக்க உதவும்.
5. நிறைய காய் கறிகளும் பழங்களும் உட்கொள்ளுங்கள்.
6. கொழுப்புள்ள உணவு பக்கம் தலை வைத்து கூட படுக்காதீர்கள்.
7. கார்போஹைட்ரேட் உள்ள உணவை அதிகம் உட்கொள்ளாதீர்கள். அதாவது அரிசியை குறைவாகவும் காய் கறிகளை அதிகமாகவும் சாப்பிடுங்கள்.
8. புரத சத்து அதிகம் உள்ள உணவை சேர்த்துக்கொள்ளுங்கள்.
9. நிறைய ஆரஞ்சு (சாத்துக்குடி) பழ சாறு உட்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
10. வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
11. பாதாம், நிலக்கடலை, காளான் உட்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்கும். பாதாம் மிகச் சிறந்தது.

எவ்வகையான உடற்பயிற்சி செய்யலாம்?

வேக நடை, நடை ஓட்டம் (jogging), சைக்கிள் ஓட்டுவது. வாரத்திற்கு 3 நாட்கள் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சியினை தவறாமல் செய்யுங்கள் அது மிக முக்கியம்.

புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை அடியோடு விட்டு விடுங்கள். புகையானது இரத்த நாளங்களின் சுவர்களை பாதித்து கெட்ட கொழுப்பு படிவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது. புகை பழக்கத்தை நிறுத்தினால் நல்ல கொழுப்பு நிறைய சேரும்.

குடியை விட முடியாமல் தவிக்கிறீங்கள சரி ரெட் வைன் அளவோட குடியுங்கள், மற்றவைக்கு தடா & பொடா தான்.

சமிக்கைகள் & அறிகுறிகள்:-

கொழுப்பு அதிகமா இல்லையா என்பதை கண்டறிய இரத்தப் பரிசோதனை ஒன்றே வழி. அதனால் குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து கொழுப்பின் அளவை அறிந்து கொள்ளுங்கள்.


கீழுள்ள இந்த அட்டவணை எந்த கொழுப்பு எவ்வளவு இருந்தா நல்லது கெட்டது என்ற குறிப்பை தருகிறது.

மொத்த கொழுப்பு (HDL + LDL)
சிறந்த அளவு>200 mg/dL க்கும் கீழே
எச்சரிக்கை அளவு200-239 mg/dL
அபாயகரமான அளவு240 mg/dL க்கும் மேலே
நல்ல கொழுப்பு
சிறந்த அளவு >60mg/dL க்கும் மேலே
நல்ல அளவு40-59 mg/dL
அபாயகரமான அளவு40 mg/dL க்கும் கீழே
கெட்ட கொழுப்பு
சிறந்த அளவு >100 mg/dL க்கும் கீழே
நல்ல (பாதிப்பில்லா)அளவு100-129 mg/dL
ஆபத்தான அளவு130-189 mg/dL
அபாயகரமான அளவு190mg/dL க்கும் மேலே
Triglycerides
சிறந்த அளவு>150 mg/dL க்கும் கீழே
எச்சரிக்கை அளவு150-199 mg/dL
ஆபத்தான அளவு200-499 mg/dL
அபாயகரமான அளவு500 mg/dL க்கும் மேலே

HDL - High-density lipoproteins
LDL - Low density lipoproteins

சனி, ஜூன் 10, 2006

மதுமிதாவின் ஆய்வுக்காக

வலைப்பதிவர் பெயர்: குறும்பன்
வலைப்பூ பெயர் : நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் & எண்ணச்சிதறல்கள்
சுட்டி(url) : (எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்) http://nalamnaadu.blogspot.com/
http://kurumban.blogspot.com/
< ஊர்: மன்னிக்க இரகசியம் :-)
நாடு: இந்தியா தற்போது அமெரிக்கா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சுயம்பு அதாவது நானே கண்டுக்கிட்டது :-))
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : நவம்பர் 02, 2005
இது எத்தனையாவது பதிவு: 14
இப்பதிவின் சுட்டி(url): http://nalamnaadu.blogspot.com/2006/06/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் நண்பனுக்கு பின்னூட்டம் இடுவதற்காக ஆரம்பித்தேன், கற்பு குஷ்புவின் பிரச்சனையில் மாலனின் கருத்துக்கு எனக்கு சரியாகபடாததால் முதல் பதிவு அவரின் கருத்தை வைத்து பதித்தேன் இவ்வகையில் மாலனே என்னை முதல் பதிவு போட காரணமானவர்.
சந்தித்த அனுபவங்கள்: சொல்லிக்கொள்ளும் படி இல்லை.
பெற்ற நண்பர்கள்: அந்த அளவுக்கு இன்னும் எழுதலை. என் நண்பனுக்கே நான் யாருன்னு தெரியாது ( இரகசியம் காக்கிறேன் :-) )
கற்றவை: தமிழ்மணம் திரட்டி மூலம் நிறைய மக்களின் எழுத்துக்களை படிக்கமுடிகிறது, சில மிகவும் பயன் உள்ளவை.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: இது என்ன அலுவலகமா மேலாலருக்கு தகுந்தபடி/பிடிச்சபடி , அலுவலக நடைமுறைக்கு தகுந்தபடி எழுத? இது என் தளம் என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம். நானே ராசா நானே மந்திரி :-)
இனி செய்ய நினைப்பவை: நிறைய எழுதனும்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: இன்னும் அந்த அளவு பெரிய ஆளாகவில்லை.

திங்கள், ஆகஸ்ட் 29, 2005

தொந்தி - தொப்பையை பற்றிய சில அடிப்படைகள்.

"ஊசி போல உடம்பிருந்தா தேவையில்லை ஃபார்மசி" - தொந்தியை குறைத்தாலே நமது உடலின் பெரும்பாலான உபாதைகள் நீங்கிவிடும். தொந்தி யாருக்கு வருகிறது என்று பார்த்தோமானால் உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்கு வருகிறது. முன்பு கடை முதலாளிகளுக்கு, கணக்குபிள்ளைகளுக்கு மட்டுமே வந்த தொப்பை இப்போ எல்லோருக்கும் வருது, . உட்கார்ந்துக்கிட்டே வேலை செய்யறவங்க கவனமா இருக்கனும். ஏன் காவலர்களுக்கு தொப்பை இருக்குனு கேட்காதீங்க :-(. அதுக்கு பல காரணிகள் இருக்கு பக்கம் பக்கமா எழுதலாம் :-)). சரிங்க பல காலமா நெய்யூட்டியோ , பீர் ஊட்டியோ சும்மா கின்னுன்னு வளர்த்துட்டேன் தினமும் 30 நிமிடம் ஓடுனா குறைஞ்சுடுமா? உண்மை என்னனா ஓடனும் ஆனா அது பத்தாது. ஓடுவது கலோரியை எரிக்கும், உடல் எடையை குறைக்கும் ஆனா தொந்திக்கான பயிற்சிகளை செய்தால் தான் தொந்தி குறையும். தொந்திக்கான பயிற்சியை செய்யாம ஓடிகிட்டேயிருந்தா தொந்தி அழகா மாறிடும்னு உடற்பயிற்சி வல்லுனர் சொல்றார் :-) உதாரணமா நீங்க மாபெரும் தொப்பைக்காரர்ன்னு வச்சுக்குவோம் ஓடி உடல் எடையை குறைச்சுட்டிங்க ஆனா கொழுப்பு போன மாதிரி தசைகள் உடனே போகாது இல்லையா? அது தொழ புழன்னு தொங்கும், தொப்பைக்கான பயிற்சிகள் அந்த சதையை குறைத்து தட்டையான வயிறு பெற உதவுது. என் உடல் எடை குறைந்து விட்டது ஆனா கீழ் வயிறு இன்னும் வெளிய தள்ளிக்கிட்டு இருக்கு, அதை எப்படி சரி பண்றது? உடல் எடை குறைப்பு பயிற்சி மட்டும் வயிற்றை தட்டையக்க போதுமானதல்ல. வயிற்றுக்கான பயிற்சி செய்யாதவரை வயிற்றை தட்டையக்க முடியாது. சரி தினமும் 50 / 60 Crunch ( தமிழ் சொல்லாக்கம் தெரியவில்லை) செய்தா போதுமா? போதாது ... இது வயிற்றின் ஒரு பாகத்திற்கான பயிற்சி, நாம நாலு வயிற்று பாகங்களை குறிவச்சு பயிற்சி செய்தால் தான் தட்டையான வயிற்றை கொண்டு வரமுடியும். சரி சரி அந்த நாலு வயிற்று பாகங்கள் என்னன்ன?? Upper Rectus Abdominus, Lower Rectus Abdominus, Obliques, Transverse Abdominus. "Rectus Abdominus " என்பது ஒரே தசையானாலும் உடற்பயிற்சி வல்லுனர்கள் அதை மேல், கீழ் "Rectus Abdominus" என்று பிரித்துக்கொள்கிறார்கள் ஏனென்றால் இரண்டுக்கும் தனியான பயிற்சிகள் செய்யவேண்டும்.

  • மேல் "Rectus Abdominus " தொப்புலுடன் முடிவடைந்துவிடும், இது வயிற்றின் மிகவும் வலுவான தசை பகுதி. எல்லோரும் விரும்பும் 6 கட்டு வயிறு (பாடி பில்டர் வயிறு பார்த்திருக்கிறீங்கில்ல) பாகம்.
  • கீழ் "Rectus Abdominus " - தொப்புலுக்கு கீழ் உள்ள பகுதி. மகப்பேருக்கு பின் இந்த பாகம் பெண்களுக்கு மிகவும் பலவீனமடைந்துவிடும். மகப்பேருக்கு முன் இருந்த நிலை அடைய பெண்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய பகுதி.
  • "Obliques" - வயிற்றின் ஓரங்களில் அமைந்த உடலை திருப்பவும், மடக்கவும் உதவும் தசை பகுதி. வலுவான "Obliques" இடுப்பு சதையை குறைத்து பத்தாம போன பேண்ட் எல்லாம் போட உதவும் பாகம்.
  • "Transverse Abdominus" - இரும்பும் போதும் தும்பும் போதும் இறுகுதே நம்ம வயிரு அந்த தசை பகுதி தாங்க இது. நாம ரொம்ப கண்டுக்காம விடற வயிற்று பாகமும் இது தாங்க. அனா ரொம்ப முக்கியமான தசை பகுதி. இது நம் உள் உடற்பாகங்களை பிடித்திருக்கும் ஒரு தசை பகுதி, இது சரியா இல்லைன்னா வயிறு பெருத்திடும். இது நம் முதுகு தண்டுக்கு உதவும் ஒரு முக்கியமான சதை பகுதி. உறுதியான " Transverse Abdominus" சமச்சீரான ஒருங்கிணைந்த உடல் அசைவுக்கு உதவுகிறது. உடற்பயிற்சி வகுப்புகளில் வயிற்றை உள் இழுக்க சொல்வதன் காரணம் இது தான். என் வயிறு தட்டையாவாது, நான் ஏன் அலட்டிக்கணும்? தவறு, எல்லோராலும் தட்டையான வயிற்றை பெறமுடியும், அதுக்கு நீங்க என்ன செய்யனும்னா தகுந்த சரியான பயிற்சி செய்யனும். கைக்கு பயிற்சி செய்திட்டு வயிறு குறையலயேன்னு கேட்ககூடாது. :-)) என்ன மாதிரியான பயிற்சிகள் செய்வது? அடுத்த பதிவில் பதிக்கிறேன். " Crunch, Upper Rectus Abdominus, Lower Rectus Abdominus, Obliques, Transverse Abdominus. " இதற்கு சரியான தமிழ் சொல்லாக்கம் தெரிந்தால் தெரிவிக்க.
  • செவ்வாய், ஆகஸ்ட் 23, 2005

    கொஞ்சம் வேகமா கை கால ஆட்டுங்கப்பா

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழி பெரும் நோயாளிகளுக்கு சொல்லாமலே புரியும்.இதய நோய், சக்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி மற்றும் இரத்த அலுத்தம் என்று ஏதாவது ஒரு நோய் இல்லாமல் 15 சதவீத மக்கள் இருப்பார்களா? இருந்தால் மிக்க மகிழ்ச்சி. நம்ம மக்களுக்கு பணம் சம்பாதிப்பதில் உள்ள ஆர்வம் உடல் நலத்தில் இல்லை என்பது வேதனையான செய்தி. நீங்கள் அறிந்தவரை (உற்றம் / சுற்றம்) எத்தனை பேர் 50 வயதுக்குள் இதய நோயால் இறந்துள்ளனர்? எத்தனை பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் அளவுக்கு மீறிய வளர்சியுடன் (குண்டாக) உள்ளனர்? கணக்கெடுத்தால் அதிர்ச்சிதான் வரும். நீங்க 15 ஆ இல்ல 85ஆ? :-) . 85 ஆ இருந்தா 15க்கு வாங்க, 15 ஆ இருந்தா 85 ஐ குறைக்க உதவுங்க.

    பள்ளிக்கூடத்தில் சொல்லி கொடுத்த எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம், காலையில் 30 நிமிடம் வேக நடை போகலாம், இரவு உணவுக்கு 30 நிமிடம் கழித்து 20 நிமிடம் காலாற நடக்கலாம், உங்க ஊரில் உலக சமுதாய சேவா மையம் ( வாழ்க வளமுடன்) இருந்தால் அவர்களின் " எளிய முறை உடற்பயிற்சிகள்" புத்தகத்தை வாங்கி அப்பயிற்சிகளை செய்யலாம், என்னால் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல முடியாத நாட்களில் நான் " எளிய முறை உடற்பயிற்சிகள்" புத்தகத்தில் உள்ள பயிற்சிகளை செய்வேன், பார்க்க சுலமா இருக்கும் ஆனா செய்துபார்த்தால் கடினமாக இருக்கும் நல்ல பலனும் இருக்கும் இதன் பலம் என்னவென்றால் இதை எல்லோரும் செய்யலாம்.

    அப்புறம் கொஞ்சம் நாவடக்கம் தேவை அதாவது ருசியா இருக்கேன்னு நிறைய உண்ணாமல் அளவாக சத்துல்ல அகாரத்தை (காய் கறி, பழம் - ஐயா பழங்கள் ருசியா இருக்கும்) புசியுங்கள். அப்புறம் உங்களுக்கு தெரிந்த உடல் நலத்திற்கு உகந்த அனைத்தையும் செய்யுங்கள்.

    "பல்லு போனா சொல்லு போச்சின்னு" சொல்லிட்டு, பல்லை நாம கவனிக்கிறதேயில்லை, பல்லும், ஈறும் நல்லா இருந்தா நிறைய நோய்கள் நம்மை அண்டாது என்ற உண்மை உணர்ந்து பல்லையும் கவனியுங்க. ஆண்டுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பல்லை சுத்தம் செய்துக்கங்கப்பா, குறிப்பா மாமிசம் சாப்படுறவங்க; வெத்திலை, பீடா, பான் பராக் போடுறவங்க; பீடி, சிகரெட், சுருட்டு புகைக்கிறவங்க அந்த பழக்கத்தை விடனும் குறைஞ்ச பட்சம் பல்லை சுத்தமா வைத்துக்கனும்.

    வாழ்க வளமுடன்.